world

img

100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மகாவா எலி உயிரிழப்பு!

கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை கொண்ட 8 வயதான மகாவா எலி உயிரிழந்தது.

உலகெங்கும் 59 நாடுகளில் சுமார் ஆறு கோடி மக்கள், கண்ணிவெடி அபாயத்துக்கு மத்தியில் வாழ்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் மூன்றாயிரம் பேர் கண்ணிவெடியால் உயிரிழக்கின்றனர்.

உலகிலேயே கண்ணிவெடி ஆபத்து அதிகம் நிறைந்த நாடு கம்போடியா. இங்கு இன்னமும் ஆயிரம் கிலோமீட்டர் சதுரப் பரப்பளவு ஆபத்தான பிரதேசமாக இருக்கிறது. 

இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால், அவற்றை அகற்றுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பணிகள் மிகவும் தாமதமாகும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எலிகளைக் கொண்டு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

அந்தப் பணியில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டது மகாவா என்ற எலி.

ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டில் பிறந்த மகாவா எலி, கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டு கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணிக்காகவே பிரத்யேகமாக பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டது.

மகாவா இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிபொருள்களையும் கண்டறிந்துள்ளது. இதற்காக மகாவா, தீரச்செயல் புரிந்த விலங்குக்கான பிரிட்டிஷ் விருதை கடந்த ஆண்டு பெற்றது. அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப்பதக்கம் பெற்றது இதுவே முதன்முறையாகும்.

இத்தகைய சிறப்புமிக்க மகாவா எலி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது

கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்ற மகாவா, இருபத்துக்கும் மேற்பட்ட எலிகளுக்கு பயிற்சி கொடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.

;